img
img

இலங்கையில் முதலமைச்சருக்கு ஆதரவாக மக்கள் பேரணி...!
செவ்வாய் 20 ஜூன் 2017 13:38:01

img

ஈழத்தமிழர்கள் நிறைந்த வட இலங்கை முதலமைச்சர் விக்கினேசுவரனை பதவியிலிருந்து விரட்ட சிங்கள இனவாத தென்பகுதிக் கட்சிகள் முனைப்பு காட்டுவது அம்பலத்துக்கு வந்துள்ளது. வடக்கு மாகாணம் முழுவதும் முதலமைச்சருக்கு ஆதரவாக பேரணி நடத்தி, தங்கள் உணர்வை வெளிப்படுத் தியுள்ளனர். தமிழீழ மக்களின் தாயகப்பகுதியான இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்தனியாக மாகாணசபைகள் ஆட்சிசெய்துவருகின்றன. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, தமிழீழ மக்களிலும் இந்துக்கள், இசுலாமியர்கள் தனித்தனி இனங்களைப் போல பிரிந்து அரசியல் கட்சிகளாகச் செயற்பட்டுவருகின்றனர். இத்துடன் சிங்களர்களும் கணிசமாக தமிழர்களுடன் வாழும் இந்த மாகாணத்தில் இந்து தமிழர் கட்சிகள், இசுலாமியத் தமிழர் கட்சிகள், சிங்களருக்கான கட்சிகள் என மூன்றுவிதமான அரசியல் சக்திகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாகாணசபையின் முதலமைச்சராக இலங்கை முசுலிம் காங்கிரசின் சைனுலாபுதீன் இருந்துவருகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தண்டாயுதபாணி, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். வடக்கு மாகாணத்திலோ எந்தக் கட்சியையும் சாராத, இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி விக்கினேசுவரன், முதலமைச்சராக உள்ளார். கடந்த சில வாரங்களாகவே விக்கினேசுவரனை மையமாக வைத்து, வடக்கு மாகாண அரசாங்கத்தில் குழப்படி நடந்துவருகிறது. நான்கு கட்சிகளின் கூட் டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு பேர் அமைச்சர்களாகப் பணியாற்றிவரும் நிலையில், மாகாணசபையின் கூட்டங்களிலேயே அரசாங் கத்துக்கு எதிராக, கூட்டமைப்பின் உறுப்பினர்களில் சிலர், புகார்களை எழுப்பினர். கூட்டமைப்பின் தலைமையைப் போல இருக்கும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே, இதில் முன்னணியில் இருந்துவருகின்றனர். இத்துடன் அமைச்சர் பதவி கிடைக்காத சிலரும் விக்கினேசுவரன் அரசின் செயல்பாடுகளைக் குறைகூறிக்கொண்டு இருக்கின்றனர். காரணம், கட்சி அரசியல் செய்பவர்களின் கைப்பாவையாக விக்கினேசுவரன் செயல் படவில்லை என்பதே! முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பின்னர், வடக்கு மாகாணத்தில் மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், சகஜவாழ்வு, மறுசீரமைப்பு தொடர்பாக வடமாகாண அரசின்சார்பிலும் ஓரளவுக்காவது பணிகள் மேற் கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்தியாவில் உள்ள மாநகராட்சி, நகராட்சி அளவுக்கே அதிகாரம்படைத்த இந்த மாகாணசபைக்கு, இலங்கை (மத்திய) அரசிடமிருந்து குறைந்த பட்ச நிதியுதவிகூடக் கிடைக்காதநிலையில், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புகளின் உதவிகளையும் பெற்று, மறுவாழ்வுப் பணிகளைச் செய்து வருகிறது. விக்கினேசுவரன் வீட்டு முன்னால் மக்கள் ஒரே கூட்டணியாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் பிற கட்சியின் அமைச்சர்கள் மீது வெளிப்படையாக விமர் சனங்களை முன்வைத்தனர். அதுவே புகார்கள் ஆகி, குற்றச்சாட்டுகளாக மாறி, மோசடிக் குற்றச்சாட்டுவரை போனது. இது பற்றி முதலமைச்சர் விக்கி னேசுவரன் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, அதன் அறிக்கையும் மாகாணசபைக் கூட்டத்தில் தாக்கல்செய்யப்பட்டது. அதில் சுகாதாரத் துறை அமைச்சர் சத்தியலிங்கம், மீன்வளத் துறை அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டியவர்கள் விசாரணையின் போது ஆஜராகவில்லை. மறைமுக மிரட்டலுக்குப் பயந்துதான் புகார்கூறியவர்கள் விசாரணையில் சாட்சிசொல்ல வரவில்லை என்று கூறப்பட்டது. மற்ற இருவரான விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், கல்வியமைச்சர் குருகுலராஜா ஆகியோர் பதவிவிலகவேண்டும் என்று அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மாகாணசபையில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில், முந்தைய இருவரையும் ஒரு மாதத்துக்கு அலுவலில் இருந்து ஒதுங்கியிருக்கும்படியும் பிந்தைய இருவரையும் பதவியிலிருந்து விலகுமாறும் கூறிய விக்கினேசுவரன், எவர் மீதும் உறுதியான குற்றச்சாட்டையும் வைக்கவில்லை; குற்றம் இழைக்கவில்லை என்றும் கூறாமல், அந்தரத்தில் தொங்குவதைப் போல நிலையெடுத்தார். இது ஒரு பக்கம் என்றால், இலங்கை தமிழரசுக் கட்சித் தரப்பு, தங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட விக்கினேசுவரன், தங்களின் விருப்பப்படி அமைச்சர்கள் ஐங்கரநேசனையின் குருகுலராஜாவையும் பதவியிலிருந்து நீக்கமறுக்கிறாரே என கோபம் கொண்டது. உச்சகட்டமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் 30 பேரில் 15 பேர் முதலமைச்சர் விக்கினேசுவரனுக்கு எதிராக வடமாகாண ஆளுநரிடம் நம்பிக்கையில்லாக் கடிதத்தைக் கொடுத்தனர். அதையடுத்து விக்கினேசுவரனுக்கு ஆதரவாக கூட்டமைப்பின் மீதமுள்ள 15 உறுப்பினர்கள் கடிதம் கொடுத்தனர். எதிர்க்கட்சிகளுக்கு எட்டு உறுப்பினர்கள் இருக்கும்நிலையில், விக்கினேசுவரனின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது. திடீர்த் திருப்பமாக, முதலமைச்சர் விக்கினேசுவரனுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு பேரணி நடத்தினர். இதனால் விக்கினேசுவரனைக் கவிழ்த்துவிட்டு, தற்போதைய அவைத்தலைவரான சி.வி. கே.சிவஞானத்தை முதலமைச்சராக்கலாம் எனத் திட்டமிட்டிருந்த தமிழரசுக் கட்சி தரப்பு அமைதியாகிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்ற மூன்று கட்சிகளின் சார்பில் டெலோ செல்வம் அடைக்கலநாதன் , ஈபிஆர்எல்எஃப் சுரேஷ் பிரேமச்சந்திரன், ப்ளாட் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர், முதலமைச்சராக விக்கினேசுவரனே நீடிக்கவேண்டும் என்று அவரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர். வட மாகாணத்தின் இந்து, கிறித்துவ சமயப் பெரியவர்களும் விக்கியிடம் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் நேற்று தன்னைச் சந்தித்த ஆதரவாளர்களிடம் பேசிய முதலமைச்சர் விக்கினேசுவரன், தனக்கு எதிராக கொழும்புவில் இருந்தே சதி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியில் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கும் சுமந்திரன் எம்.பி.யின் தரப்பினரே, விக்கினேசுவரனுக்கு எதிராக கொடிபிடித்து வருகிறார்கள். கொழும்பை மையமாகக் கொண்டே இயங்கிவந்த சுமந்திரன், இலங்கை எதிர்க்கட்சித் தலைவரான சம்மந்தனுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசாவுக்கும் நெருக்கமானவர் என்பதாலேயே, அவருக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் எம்.பி.ஆனதுடன், கட்சியின் செய்தித்தொடர்பாளர் எனும் பதவியைப் பெற்றார். தொடர்ந்து கட்சியில் அவருடைய கை ஓங்கியபடி உள்ளது. ராஜபட்சே, ரனில், மைத்திரி மூவரில் யாராக இருந்தாலும் சுமந்திரன் தரப்பு இணக்கமாகவே செயல்பட்டுவருகிறது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள மற்ற கட்சிகளின் குற்றச்சாட்டு. விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் அழித்தொழிக்கப்பட்ட பிறகு, வடக்கு மாகாண மக்களின் பரவலான ஆதரவைப் பெற்ற ஒருவராக விக் கினேசுவரன் உருவாகிவருவதை, சிங்கள இனவாத கொழும்பு ஆட்சியாளர்கள் சிறிதும் சகித்துக்கொள்ளவில்லை. முன்னாள் படைத்தளபதியும் இப் போதைய இலங்கை அமைச்சருமான சரத் பொன்சேகா உட்பட பலரும் விக்கினேசுவரன் மீது பகிரங்கமாக எதிர்க்கருத்தைக் கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img